பொதுநலவாய விளையாட்டு விழாவில் கடற்கரை கரப்பந்தாட்டம், பட்மின்டன் போட்டிகளில் பிரகாசித்து வரும் இலங்கை

By T Yuwaraj

05 Aug, 2022 | 04:04 PM
image

( இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் கடற்கரை கரப்பந்தாட்டம், பட்மின்டன் ஆகிய போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் கால் இறுதிப் போட்டிகளில் விளையாட  தெரிவாகியுள்ள இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி,  அப் போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினால் ஏதாவது பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகிவிடும்.

இன்று நடைபெறவுள்ள ஆண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மெக்ஹியூ - பெர்னெட் ஜோடியினரை இலங்கையின் மலின்த - அஷேன் ஜோடியினர் எதிர்த்தாடவுள்ளனர்.

பெண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் கனடாவின் பவன் - மெலிசா ஜோடியினரை இலங்கையின் தீப்பிகா - சத்துரிக்கா ஜோடியினர் சந்திக்கவள்ளனர்.

பட்மின்டன்

பட்மின்டன் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமான நிலூக்க கருணாரட்ன, துமிந்த அபேவிக்ரம, இரட்டையர் பிரிவில் சச்சின் டயஸ் - புவனேக்க குணதிலக்க ஜோடியினர், கலப்பு பிரிவில் சச்சின் டயஸ் - தில்லினி ஹெந்தஹேவா ஜோடியினர் ஆகியோர் 16 அணிகள் சுற்றில் (ரவுண்ட் ஒவ் 16) விளையாட தகுதிபெற்றுள்ளனர்.

இன்று இரவு நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஒற்றறையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் நம்மாழ்வாரை இலங்கையின் துமிந்து அபேவிக்ரம எதிர்த்தாடவுள்ளார்.

மற்றொரு போட்டியில் சீங்கப்பூரின் ஜியா ஹெங்கை நிலூக்க கருணாரட்ன எதிர்த்தாடவுள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் தென் ஆபிரிக்காவின் ரொபர்ட் - ஜொஹானிட்டா ஜோடியினரை இலங்கையின் சச்சின் டயஸ் - தில்லினி ஹெந்தஹேவா ஜோடியினர் எதிர்த்து விளையாடவுள்ளனர்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மாலைதீவுகளின் அஹ்மத் - அஜ்பான் ஜோடியினரை இலங்கையின் சச்சின் டயஸ் - புவனேக்க குணதிலக்க ஜோடியினர் சந்திக்கவுள்ளனர்.

நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா

இன்று பகல் நடைபெறவுள்ள பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கையின் சாரங்கி சில்வா பங்குபற்றவுள்ளார்.

இரண்டு குழுக்களில் நடைபெறும் இப்போட்டியில் சாரங்கி சில்வாவுக்கு பெரும் சிரமம் காத்திருக்கிறது.

6.65 மீற்றர் தூரத்தை அதிசிறந்த தூரப் பெறுதியாகக் கொண்டுள்ள சாரங்கியை விட 9 வீராங்கனைகள் அதிக தூரம் பாய்ந்துள்ளனர். 

அதற்கு முன்பதாக பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன பங்குபற்றுகின்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right